Friday, November 29, 2013

பாரீஸுக்குப் போனேன்

ரொம்ப நாளாக பாரீஸில் ஒரு வேலை - நம்ப சென்னை பாரீஸ் கார்னர் தான்.

 போலாமென்று முடிவெடுத்தப்போ பார்க்கிங்கை நினைத்தாலே அங்கு காரில் போவதற்க்கு  பயமாக இருந்தது. ஆட்டோக்காரர்கள் புது மீட்டர் பொருத்தலமா  வேண்டாமா, பொருத்திய மீட்டரை மடக்குவதா வேண்டாமா போன்ற பல குழப்பங்களிலிருந்து இன்னும் மீளாததால் அதையும் ஒதுக்கியாயிற்று. பஸ்ஸில் போனாலென்ன என்ற அந்த விபரீத (?) ஆசை வலுவெடுத்து, பல வருஷங்களுக்குப் பிறகு நேற்று 21ம் நம்பர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தே விட்டேன். பாரிசுக்கு  நாலு  ரூபாய் டிக்கெட் எடுத்து ஒவ்வொரு முறை கியர் மாற்றும் பொழுதும் ஒரு உதறு உதறிய பஸ் உற்சாகமாகத்தான் ஓடியது.

ப்ரபல எழுத்தாளர் சொன்னது போல் காரில் இருந்து பார்த்தால் ஒரு சதுரத்துக்குள்ளேயே தெரிந்த தெருக்கள், பஸ் ஜன்னலும் சதுரமாய்த்தான் இருந்தாலும், உயரத்திலிருந்து வேறாகத்தான் இருந்தது. ஒரு காலத்தில் சந்தாக இருந்தவைகளெல்லாம் இன்று ஒன் வேயாக மாறி இருந்தது.  மெட்ரோவுக்காக வளைந்து கொடுத்திருந்த அண்ணா சாலையில் பஸ் அந்தக் கால கண்ணாடிக்குள் போட்டு விளையாடும் குண்டு போல் ஓடியது.  பிலால் ஓட்டலும் பாட்டாவும் காணாமல் போய் சரவண பவனும் வஸந்த பவனும் போட்டி போட்டுக் கொண்டிருந்தது. இரவு நேர ரிச்சித் தெரு ரங்கனாதன் தெரு போல் ஜக ஜோதியாக இருந்தது. புதிய தலைமைச் செயலகம் புது தில்லியிலுள்ள புராணக் கட்டிடம் போல் களையிழந்து போயிருந்தது. சிந்தாதிரிபேட்டை தாண்டியவுடன் ஹட்சன் போல் ஒடிய நதி கருணையுடன் கொஞ்சம் துர் நாற்றமில்லாமல் இருந்தது - இதை யாரும் கவனிக்கக் கூடாதா?ஜெயில் அருகில் உள்ள பாலம் மட்டும், புது ரோட்டுடன் பள பளப்பாக இருந்தது - அடிக்கடி பல பெரிய மனிதர்கள் புழங்கும் இடம் என்பதாலோ??

நடந்த சில நல்ல காரியங்களில் பஸ்கள் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள்ளே போவது எவ்வளவு உபயோகமானது என்று அங்கு இறங்கி ஏறும் கும்பலில் தெரிந்தது.

பாரீஸ் மட்டும் மாறவே இல்லை. அதே கும்பல், அதே குப்பை, அதே துர் நாற்றம். அதெப்படி இங்கு மட்டும் சாலையில் அவ்வளவு குப்பை? அகற்றுவதே இல்லையா அல்லது அது போதவில்லையா? ஆயிரக்கணக்கான மக்கள் புழங்கும் இந்த சந்திப்பை ஒரு பொது நலத்துக்காகவாவது இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்திருக்கலாம்.

அந்த ராணி சிலையின் பக்கத்தில் உள்ள கார் பார்க் நிரம்பி வழிந்தது- சில கார்களை எடுப்பதே இல்லையோ என்ற சந்தேகத்தை அதன் மேல் உள்ள தூசியில் எழுதியுள்ள "ரஜினி" என்ற எழுத்து ஆமோதித்தது.

இதற்க்கெல்லாம் நடுவில் அந்த பெரிய பஸ்ஸை லாவகமாக ஒடித்து ஓட்டும் ஓட்டுனரைப் பாராட்டியே ஆகவேண்டும். நமக்குத்தான் அப்பப்ப படபடத்து கண்ணை மூடி தெருவைக் கடக்கும் பூக்காரக் கிழவிக்காகவும், தலையை ஒரு பக்கம் சைடு வாங்கி போன் பேசியபடியே குறுக்கே பாயும் மோட்டார் சைக்கிள் காரரின்  உயிருக்காகவும் ப்ரார்த்திக்க வேண்டி இருந்தது.

பஸ் திரும்பும் பிஸி திருப்பத்தில் நட்ட நடுவில் ஒரு பெரிய குட்டை போல் சாக்கடைத் தண்ணீர் கொசுக்களுடன் பள பளத்தது. இதெல்லாம் எங்களுக்கு சகஜம் என்பது போல் யாரும் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.  அருகே பப்பாளிப் பழத்தை துண்டாக நறுக்கி விற்பனை மும்முறமாக நடந்தது. பிரம்புக் கடை தெரு என்ற  ரட்டன் பஸார் , ஈவனிங் பசார் தெருக்களெல்லாம் புதிய பேரை நீலக் கலர் போர்டில் மாற்றி இருந்தாலும், வியாபாரம் என்னவோ அதே தான்.

 போலிஸ் ஸ்டேஷன் எதிரிலியே தொடங்கி வரிசையாக குறுந்தகடுகள் விற்பனை - 120 பாடல்கள் கொண்ட தகடு 25 ருபாய்தான். அடிமைபெண்ணிலுருந்து விஸ்வரூபம் வரை (ஒரிஜினல் ப்ரிண்ட் ஸார்) எதெடுத்தாலும் இருபதிலுருந்து முப்பது வரை தான். அப்பப்ப ஒருத்தர் பக்கத்தில் வந்து "வேறு ஏதாவது புதுப் படம் தேட்ரீங்களா சார் ' என்று உபசரிப்பு வேற.

மான் மார்க் குடை விற்க்கும் கடை, ரமணனின் பேச்சை நம்பி வரவிருக்கும் மழையை எதிர்நோக்கிக் கதவை விரித்துக் காத்திருந்தார்கள்.

செல் போன் வந்தாலும் வந்தது, மக்கள் இடம் பொருள் ஏவல் பார்க்காமல் பஸ்ஸிலும் சகஜமாகப் பேசுகிறார்கள். "அடுப்புல பால வை, தோ வந்துண்டே இருக்கேன்",  "கூடுவாஞ்சேரியில் நாலு செண்டுக்கு இது சீப்புத்தான், உடனே வளைச்சுடு:, "நாளைக்கி கண்டிப்பா கொடுத்துடறேன் சார்" - இப்படிப் பல.

மந்தைவெளியிலிருந்து போக வர பத்து ரூபாய்தான். உட்கார்ந்து போகலாம். நல்லா வேடிக்கை பார்க்கலாம். ஆனால் இதெல்லாம் காலை ஆபீஸுக்குப் போகும்போது கிடைக்குமா- சந்தேகம்தான்