தெய்வத்தின் குரல் - இன்று படித்ததில் பிடித்தது -(7-Sep-2011)
ப்ரபஞ்சத்தில் ஒவ்வொன்றுக்கும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நியதி இருக்கிறது. அப்படி அவை நியதிப்படி நடப்பதால்தான் உலக வாழ்க்கை நடக்க முடிகிறது. இல்லாவிட்டால் எல்லாம் நெறி கெட்டுப் போய்விடும்.. ஸ்வாமி மனிதனுக்கு மூளையைத் தந்து விளையாடிப் பார்க்கிறார். அந்த மூளையை வைத்துக் கொண்டு இவனும் எதை எதையோ சௌக்கியமாக நினைத்துக் கொண்டு அவற்றுக்காக அலைகிறான்.
உலக வாழ்வுக்கு மனிதன் பணமும் பொருளும் சேர்த்தான். அன்றைய தேவையோடு போதாது என்று எதிர் காலத்துக்காகவும் சேர்த்தான். 'எதிர்காலம்' என்ற பொழுது அது எத்தனை வருடம் என்ற கேள்வி வந்தது. எப்படியிருந்தாலும் ஒருவன் ஆயிரம் வருஷம் இருக்கப் போவதில்லை என்று தெரிந்தது. ஒரு மனுஷ்யனின் ஆயுள் உள்ளவரைக்கும், அந்த மனுஷ்யனின் சந்ததிக்கும் தேவைப்படுகிற சொத்தைத் தேடினான்.
இந்த மனுஷ்ய ஆயுள் முடிந்தபின் அவன் என்ன ஆகிறான் என்ற கேள்வி வந்தது. இந்த உடம்பு போனதோடு மனுஷ்யனும் போய்விடவில்லை என்று அந்தந்த தேசத்தில் தோன்றிய மகான்கள் கண்டார்கள். ஆனால் அந்த உடம்புக்காகத் தேடிய பணமும் பொருளும் உடம்பு போனபின் அந்த மனுஷ்யனுக்கு சிறிதும் ப்ரயோசனம் இல்லை என்று கண்டார்கள்.
உடம்பு போனபின் கை, கால் முதலிய அவயங்கள் இல்லை. எனவே உடம்பு இருக்கும் பொழுதே தர்ம கார்யங்களைச் செய்ய வேண்டும். ஆயுள் போன பிற்பாடு நமது நலனுக்கே நிறந்தர இன்ஷூரன்சாக இருப்பது தர்மமே..
மனுஷ்யனாகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை உணர்த்தத்தான் புத்தாண்டில் , முதலில் பூக்கும் வேப்பம் பூவை உண்கிறோம். வருஷத் தொடக்கத்திலேயே கசப்பை ஏற்க்கிறோம். ஏறக்குறைய வருஷ முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம். இதனால், போகப்போக முடிவில் எந்த அனுபவத்தையுமே தித்திப்பாக எண்ணுகிற மனப்பான்மை உண்டாகும்.
ஊருக்குப் போகும் குழந்தைக்கு தாயார் கட்டுச்சாதம் கொடுப்பதுபோல் கௌசல்யை பதினான்கு வருடங்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் பட்சனத்தைத் தேடினாள். பிறகு, காட்டுக்குச் செல்லும் பொழுது, கௌசல்யை, ராமனுக்கு நிரந்தர பஷ்ணமான தர்மத்தைத்தான் கட்டிக் கொடுத்தாள்
தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட அவனை ஆதரிக்கும். அதர்ம மார்க்கத்தில் விழுந்தால், உடன் பிறந்தவனும் எதிரியாகிவிடுவான் என்பதை ராமாயணம் நிரூபிக்கிறது.
ஸ்ரீ ராமனை வானரங்களும் ஆதரித்தன. ராவணனையோ சகோதரன் விபீஷணனும் விட்டு விலகினான்.
No comments:
Post a Comment