Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Friday, November 29, 2013

பாரீஸுக்குப் போனேன்

ரொம்ப நாளாக பாரீஸில் ஒரு வேலை - நம்ப சென்னை பாரீஸ் கார்னர் தான்.

 போலாமென்று முடிவெடுத்தப்போ பார்க்கிங்கை நினைத்தாலே அங்கு காரில் போவதற்க்கு  பயமாக இருந்தது. ஆட்டோக்காரர்கள் புது மீட்டர் பொருத்தலமா  வேண்டாமா, பொருத்திய மீட்டரை மடக்குவதா வேண்டாமா போன்ற பல குழப்பங்களிலிருந்து இன்னும் மீளாததால் அதையும் ஒதுக்கியாயிற்று. பஸ்ஸில் போனாலென்ன என்ற அந்த விபரீத (?) ஆசை வலுவெடுத்து, பல வருஷங்களுக்குப் பிறகு நேற்று 21ம் நம்பர் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தே விட்டேன். பாரிசுக்கு  நாலு  ரூபாய் டிக்கெட் எடுத்து ஒவ்வொரு முறை கியர் மாற்றும் பொழுதும் ஒரு உதறு உதறிய பஸ் உற்சாகமாகத்தான் ஓடியது.

ப்ரபல எழுத்தாளர் சொன்னது போல் காரில் இருந்து பார்த்தால் ஒரு சதுரத்துக்குள்ளேயே தெரிந்த தெருக்கள், பஸ் ஜன்னலும் சதுரமாய்த்தான் இருந்தாலும், உயரத்திலிருந்து வேறாகத்தான் இருந்தது. ஒரு காலத்தில் சந்தாக இருந்தவைகளெல்லாம் இன்று ஒன் வேயாக மாறி இருந்தது.  மெட்ரோவுக்காக வளைந்து கொடுத்திருந்த அண்ணா சாலையில் பஸ் அந்தக் கால கண்ணாடிக்குள் போட்டு விளையாடும் குண்டு போல் ஓடியது.  பிலால் ஓட்டலும் பாட்டாவும் காணாமல் போய் சரவண பவனும் வஸந்த பவனும் போட்டி போட்டுக் கொண்டிருந்தது. இரவு நேர ரிச்சித் தெரு ரங்கனாதன் தெரு போல் ஜக ஜோதியாக இருந்தது. புதிய தலைமைச் செயலகம் புது தில்லியிலுள்ள புராணக் கட்டிடம் போல் களையிழந்து போயிருந்தது. சிந்தாதிரிபேட்டை தாண்டியவுடன் ஹட்சன் போல் ஒடிய நதி கருணையுடன் கொஞ்சம் துர் நாற்றமில்லாமல் இருந்தது - இதை யாரும் கவனிக்கக் கூடாதா?ஜெயில் அருகில் உள்ள பாலம் மட்டும், புது ரோட்டுடன் பள பளப்பாக இருந்தது - அடிக்கடி பல பெரிய மனிதர்கள் புழங்கும் இடம் என்பதாலோ??

நடந்த சில நல்ல காரியங்களில் பஸ்கள் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள்ளே போவது எவ்வளவு உபயோகமானது என்று அங்கு இறங்கி ஏறும் கும்பலில் தெரிந்தது.

பாரீஸ் மட்டும் மாறவே இல்லை. அதே கும்பல், அதே குப்பை, அதே துர் நாற்றம். அதெப்படி இங்கு மட்டும் சாலையில் அவ்வளவு குப்பை? அகற்றுவதே இல்லையா அல்லது அது போதவில்லையா? ஆயிரக்கணக்கான மக்கள் புழங்கும் இந்த சந்திப்பை ஒரு பொது நலத்துக்காகவாவது இன்னும் கொஞ்சம் சுத்தமாக வைத்திருக்கலாம்.

அந்த ராணி சிலையின் பக்கத்தில் உள்ள கார் பார்க் நிரம்பி வழிந்தது- சில கார்களை எடுப்பதே இல்லையோ என்ற சந்தேகத்தை அதன் மேல் உள்ள தூசியில் எழுதியுள்ள "ரஜினி" என்ற எழுத்து ஆமோதித்தது.

இதற்க்கெல்லாம் நடுவில் அந்த பெரிய பஸ்ஸை லாவகமாக ஒடித்து ஓட்டும் ஓட்டுனரைப் பாராட்டியே ஆகவேண்டும். நமக்குத்தான் அப்பப்ப படபடத்து கண்ணை மூடி தெருவைக் கடக்கும் பூக்காரக் கிழவிக்காகவும், தலையை ஒரு பக்கம் சைடு வாங்கி போன் பேசியபடியே குறுக்கே பாயும் மோட்டார் சைக்கிள் காரரின்  உயிருக்காகவும் ப்ரார்த்திக்க வேண்டி இருந்தது.

பஸ் திரும்பும் பிஸி திருப்பத்தில் நட்ட நடுவில் ஒரு பெரிய குட்டை போல் சாக்கடைத் தண்ணீர் கொசுக்களுடன் பள பளத்தது. இதெல்லாம் எங்களுக்கு சகஜம் என்பது போல் யாரும் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.  அருகே பப்பாளிப் பழத்தை துண்டாக நறுக்கி விற்பனை மும்முறமாக நடந்தது. பிரம்புக் கடை தெரு என்ற  ரட்டன் பஸார் , ஈவனிங் பசார் தெருக்களெல்லாம் புதிய பேரை நீலக் கலர் போர்டில் மாற்றி இருந்தாலும், வியாபாரம் என்னவோ அதே தான்.

 போலிஸ் ஸ்டேஷன் எதிரிலியே தொடங்கி வரிசையாக குறுந்தகடுகள் விற்பனை - 120 பாடல்கள் கொண்ட தகடு 25 ருபாய்தான். அடிமைபெண்ணிலுருந்து விஸ்வரூபம் வரை (ஒரிஜினல் ப்ரிண்ட் ஸார்) எதெடுத்தாலும் இருபதிலுருந்து முப்பது வரை தான். அப்பப்ப ஒருத்தர் பக்கத்தில் வந்து "வேறு ஏதாவது புதுப் படம் தேட்ரீங்களா சார் ' என்று உபசரிப்பு வேற.

மான் மார்க் குடை விற்க்கும் கடை, ரமணனின் பேச்சை நம்பி வரவிருக்கும் மழையை எதிர்நோக்கிக் கதவை விரித்துக் காத்திருந்தார்கள்.

செல் போன் வந்தாலும் வந்தது, மக்கள் இடம் பொருள் ஏவல் பார்க்காமல் பஸ்ஸிலும் சகஜமாகப் பேசுகிறார்கள். "அடுப்புல பால வை, தோ வந்துண்டே இருக்கேன்",  "கூடுவாஞ்சேரியில் நாலு செண்டுக்கு இது சீப்புத்தான், உடனே வளைச்சுடு:, "நாளைக்கி கண்டிப்பா கொடுத்துடறேன் சார்" - இப்படிப் பல.

மந்தைவெளியிலிருந்து போக வர பத்து ரூபாய்தான். உட்கார்ந்து போகலாம். நல்லா வேடிக்கை பார்க்கலாம். ஆனால் இதெல்லாம் காலை ஆபீஸுக்குப் போகும்போது கிடைக்குமா- சந்தேகம்தான்

Saturday, August 10, 2013

தலைப் பிரசவம்

அன்புடையீர்

வாழ்க்கையின் பல பரிமாணங்களை எதிர் கொள்ள வேண்டும் என்ற ஆவல் என்னிடையே என்றும் இருக்கிறது. ஆனால் அதை  ஒரு மித்தமாக  நேர்க்காணும் தைரியம் எனக்குள் இன்னும் வரவில்லை. ஆகையால் , ஒரு குழந்தையைப் போல் ஒவ்வொரு படியாக ஏற முற்ச்சிக்கிறேன்.

இம்முயற்ச்சியில் முதல் படியாக என் வலைப்பூ(
  http://kapalicanvas.blogspot.com/)  ஆரம்பித்தேன். இது தந்த உற்ச்சாகத்தில், இதற்க்குக் கிடைத்த வரவேற்ப்பில்  தமிழிலும் எழுதத் துணிந்ததில்  என் தமிழ் வலைப்பூ (
http://chinthikkiren.blogspot.in/) மலர்ந்தது. 

எனக்குத் தோன்றும் எண்ணங்களையும், அபிப்ராயங்களையும் வலைப்பூ மட்டுமில்லாமல் சிறிது அனுபவமும் கற்பனையையும் குழைத்து ஒரு கதையாக மெருகேற்றினால் என்ன என்ற எண்ணம் தான் , என் முதல் கதைக்கு மனதளவில் வித்திட்டது. சமீப காலமாகப் படித்த பல கதைகள் என் இந்த ஆசையைத் மேலும் தூண்டி விட, விளைந்த சிறு செடி தான் , என் முதல் கதை "பரிகாரம்".

இது தமிழ் எழுத்தாளர்களை ஆதரித்து அவர்களுக்குத் தளமளிக்கும் http://www.sirukathaigal.com/. என்ற இடத்தில் என் உண்மையான  "கபாலி" என்ற பெயரில் இன்று ப்ரசுரிக்கப்பட்டுள்ளது.

காக்கைக்கும் தன் தன் குஞ்சு பொன் குஞ்சுதான்- என் கதை வடிவ முதல் கன்றை ஈன்றதில் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளேன்

முதலடியை எடுத்து வைத்துள்ளேன்- இன்னும் பல கல் கடக்க உள்ளேன்-  தங்கள் வாழ்த்துக்களுடன்

என்றுமே என் எண்ணங்களையும் எழுத்துக்களையும் பற்றிய உங்களின் கருத்துக்கள் என்னை உற்ச்சாகப் படுத்தியிருக்கின்றன, சிந்திக்க வைத்திருக்கின்றன. ஆகையால் தங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் :    


Friday, June 29, 2012

தள்ளாடும் தலைமுறை

என்றைக்குமே எனக்கு டீ வீ பார்ப்பதில் ஒரு தயக்கமான நாட்டம்தான். என்னுடைய பார்வை எல்லாம் கிரிக்கெட், பாடல்கள், அப்பப்போ சினிமா (கொஞ்சம் வருடங்களுக்கு முன்னால் வரை), மற்றும் எப்பொழுதுமே செய்திகள்- ஆங்கிலமும், தமிழும்.

இப்பொழுதெல்லாம் , ரிடயர் ஆனதுக்கப்புறம் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளையும் பார்க்க தொடங்கியுள்ளேன் - ஆனால் என்றைக்குமே சீரியல்களுக்கு ஒரு பெரிய நோ நோ தான் - எதற்க்கு வீணாக உணர்ச்சிகளை சிந்தி உடம்பைக் கெடுத்துக்கணும்.

சமீப காலமாக வரும் சில உண்மை நிகழ்சிகள் என்னை திடுக்கிடச் செய்வதோடு, கொஞ்சம் சிந்திக்கவும் வைத்தது. அனேகமாக எல்லா பிரச்சினைகளுக்கும் பிரதான காரணம்: குடி, பெண்.

மனசாட்சியே இல்லாமல், மிகவும் சாதுவாக இருந்து கொண்டு ஆனால் வெளியே ஒரு பெண்ணிடம் தனி உலகம் நடத்துகிறார்கள்- இது ஒரு ரகமென்றால் இன்னொன்று குடியினால் வந்த  விளைவுகள் - மனைவியை அடி, உதை, வேலைக்கு போகாமல் இருப்பது, குறுக்கு வழியில் பணம், கெட்ட சகவாசம், பெண் - இப்படி இன்னொரு ரூட். நம் தமிழ் சினிமாவுக்கும் பல நாட்டுகள் இதைச் சுற்றித்தான் இருக்கும் போல- அதனால் தான் உண்மைக் கதை போல் இருக்கு- நல்லா கல்லா கட்டுகிறது.

சிறு பையன் முதல் பெரியர் வரை குடிபழக்கம். இது என்ன கேடு கெட்ட வழிமுறை? ஒரு கணவன் தன் மூவாயிரம் சம்பளத்தில், இரண்டாயிரம்தான் வீட்டிற்க்குத் தருகிறார் என்கிறாள் ஒரு பெண்- மாதம் ஆயிரம் ரூபாய் குடிப்பதற்க்கா? குடும்பம் என்னாவது?

ஒருவன் தன் வாழ்னாள் முழுவதும் மாதம் ஆயிரம் ரூபாய் சேமித்தால், அறுபது வயதில், எத்தனை லட்சங்கள் கிடைக்கும் தெரியுமா? இதை ஏன் ஒரு பென்ஷன் போல் எடுத்துக் கொள்ளக் கூடாது? அல்லது, மூன்று மாதங்களுக்கு ஒரு கிராம் தங்கம் வாங்கினால், பெண் கல்யாணத்துக்கோ அல்லது மனைவிக்கோ எவ்வளவு நகை செய்யலாம்? பிற்க்காலச் செலவுக்கு இது எப்படிக் கை குடுக்கும் தெரியுமா ?

சரி- உங்களிடம் நிறைய பணம் இருக்கிறதென்றே வைத்துக் கொண்டால்- உடம்பு என்னாவது? ஒரு எட்டு அப்பலோ கான்சர் ஸ்பெஷாலிடியோ, அடயார் ஆஸ்பத்ரியோ எட்டிப் பாருங்கள். அப்புறம் சோடா புட்டி கூட தொட மாட்டீர்- அவ்வளவு அவஸ்தை. ரகம் ரகமாக கான்சரில் எத்தனை விதம். வாயில், வயிற்றில், மலத்துவாரத்தில், முதுகுத் தண்டுவடத்தில், மூளையில் இப்படி பல அவஸ்தை. ஒன்றுமே பழக்கம் இல்லாமல், என் அண்ணனுக்கு புற்று நோய் வந்து, அவசரமாக வாரிக் கொண்டதுபோல் நடந்தால், உலகமே உண்மயில் இரங்கும். இப்படி ஏதாவது பழக்கம் என்றால் உலகம் என்ன, உங்கள் உறவே காரித் துப்பும். இது தேவையா?

நீங்கள் அதி புத்திசாலியாகவோ அல்லது அதி மேதையாகவோ இருந்தாலும், கடைசியில் கிடைக்கும் பட்டம் என்னவோ - "ஓ அந்தக் குடிகாரனா"

இந்தப் பழக்கத்துக்குள் உலவும் சோஷலிசமோ வியப்பானது - இதற்க்குப் பணக்காரனோ ஏழையோ பாகுபாடே கிடையாது. இருவரும் வாந்தியெடுத்து, ஒரே ப்ளாட்பாரத்தில்தான் கிடப்பார்கள்.

இதனால் என்ன சுகம்- உலகமே மதிப்பதில்லை. பெண்டாட்டி , பிள்ளைகள் அவமானத்தில் புழுங்குகிறார்கள். காசு விரயம். டாக்டர் புழுவைப்போல பார்க்கிறார். குடிப்பவனுக்கு அவஸ்தை வேறு. அப்படி இந்தக் கண்றாவிதான், குடிப்பதற்க்காவது நன்னயிருக்கா - அதுவும் இல்லை. குடிச்சுட்டு ஒவ்வொருத்தன் மூஞ்சி போற போக்கே சொல்லுது. அப்புறம் ஏன் ?

இது எப்படி ஒருத்தரை தொத்திக்கறது? ஸ்கூல் முடியறப்பவே ட்ரீட்டில் ஆரம்பிக்கறது. சில அப்பாக்களுக்குத் தெரிவதே இல்லை, சிலருக்கு தர்ம சங்கடம் ஏன்னா அவரே தாக சாந்தி ஆசாமி. காலேஜ்ல கேட்கவே வேண்டாம், ஆசை காட்டியே வழிக்குக்கு கொண்டுவந்திருவாங்க. ஆபீஸ் போனால் இதற்க்கான கேள்வி கேட்காத பாஸ்போர்ட்டும் , வீசாவும் கிடைத்த மாதிரி. வாரம் முழுக்க வேலை செய்யராங்களோ இல்லயோ, வெள்ளிக்கிழமையானால் முகத்தில் தனி பொலிவு, சந்தோஷம். கொஞ்ச நஞ்சம் தயங்கறவங்களையும் சகாக்களும், சீனியர்களும் சரிக்கட்டிடுவாங்க. இதுதான் ஆரம்பம். அதற்க்கப்புறம் முடிவு அவரவர் வேகத்தைப் பொறுத்தது.

சமீபத்திய காளானான IT கம்பெனிகளின் சம்பளங்கள், பலரை ஊட்டி வளர்க்கின்றன. இதனால் தான் ஒண்டுக் குடித்தனத்தில் இருந்து கஷ்டப்பட்டுப் படித்து வேலை கிடைத்தும், இன்னும் பல பேரால் வீடு கூட வாங்க முடியவில்லை. காரணம் உள்ளேயே இருக்கு.

நான் ஒண்ணும் குடிக்கரவனெல்லாம் அயோக்யன் மற்றவர்களெல்லாம் யோக்யர்கள் என்று சொல்லவில்லை. நம் உடலுக்குக் கேடு, அதோடு நம் குடும்பத்தவர்களுக்கும் மஹா ஸ்ரமம். வெள்ளைக்காரனிடமிருந்து கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கு, அதையெல்லாம் விட்டுட்டு இந்த சனியன் மட்டும் ஏன்?

பெண்கள் இன்னும் தைர்யமாக வேண்டும். குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவனை, வீட்டுக்குள் சேர்க்காமல் இருக்கணும். குடிக்காத அப்பாக்கள்,  மகன் குடித்துவிட்டு வந்தால்  அந்தக் கால அப்பாக்கள் போல் பெல்ட்டை உருவ வேண்டும். இதெல்லாம் இந்தக் காலத்துக்கு ரொம்ப ஓவராகத்தான் தெரியும்- ஆனால் குடும்பதுக்காகவும், உடம்புக்காகவும் செய்தே ஆக வேண்டும்- பின்னாடி புலம்பியோ, டீ வீ யில் பேட்டி கொடுத்தோ ப்ரயோஜனம் இல்லை.

அரசாங்கமும் உதட்டளவு சொல்லாமல், மது விலக்கை அமுல் படுத்தினால், இது கொஞ்சம் குறையலாம். அதற்கென்ன கள்ளச் சரக்கு அடிப்பார்கள், பாண்டி போவார்கள் என்று அடுக்கலாம்- அப்படிப்பட்ட தீவிர ரசிகர்களை குடும்பம்தான் மேற்சொன்னபடி கவனிக்க வேண்டும். அப்படியும் திருந்தலேன்னா எக்கேடு கெட்டு போன்னு விட வேண்டியதுதான்.

எனக்குப் பாலிடிக்சில் ஆர்வம் கிடையாது- ஆனால் அதெப்படி குஜராத்தில் மட்டும் ரொம்ப வருஷமாகவே மது விலக்கு இருக்காமே - ஏன் நாம் செய்யக்கூடாது? உடம்பப் பாத்துக்கோங்கப்பா.

Sunday, June 17, 2012

அப்பா - அன்புள்ள அப்பா




எல்லாருக்குமே, முக்கியமாக பசங்களுக்கு முதல் ஹீரோ அப்பாதான்- இதென்னவோ ஒரு மாறாத கூற்றாக பல வருடங்களாக இருந்து கொண்டேதான் இருக்கிறது. பல சினிமாக்கள் பார்த்தும், இது மாறுவதில்லை, கொஞ்ச வயசு வரை- அப்பறம் இலக்கு மாறும் போது தான் திசை திரும்புகிறது. இந்த ஹீரோ ஆராதனைக்கு நானும் விதி விலக்கல்ல.

சொல்லப் போனால், என் அப்பாவின் அருமையும் பெருமையும் அவருக்குப் பின் தான் எனக்கு மேலும் தெளிவடைந்தது. என் அப்பா தன் பிள்ளைகளின் மேல் வைத்த அபார நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஒரு சம்பந்திக்கு அவரின் பதிலில் தெரிந்தது- " எனக்கு வீடு வாசல் எல்லாம் கிடையாது. என் மூன்று பிள்ளைகளும் தான் என் சொத்து".

அவரைப்பற்றி என்னுடைய உடனுக்குடனான க்யாபகங்கள் சில:

·         வெள்ளைக்காரன் கம்பெனியில் இருந்ததாலோ என்னவோ, அவரின் உடைகள் அபாரம். அந்தக் காலத்திலேயே 4 ஜதை ஷூ வைத்திருந்தார் !
·         நேரம் தவறாமை, கண்டிப்பாக , அந்த ஜீன்சிலிருந்து தான் (கோபமும் அதே என்று குரல் கேட்கிறது)
·         நியூ காலேஜ் சேர்மன் வீட்டு வாசலில் அடம் பிடித்து என் அண்ணனுக்கு இடம் வாங்கியது.
·         எந்த சவாலையும் சமாளிக்க கற்றுக் கொடுத்தது அவர் தான். துணை வேந்தர் அளவுக்குச் சென்று என் அண்ணனுக்கு இடம் வாங்கி, அவரும், முதல் ராங்க் வந்து- முயற்ச்சிக்கு அழகு கூட்டினார்.
·         ஆங்கிலத்தில் எந்த சந்தேகங்களுக்கும் உள்ள ரெடி மேட் கய்டு அவர்- ஆனால் அவர் படித்ததென்னவோ அந்த கால ப்ளஸ் டூ தான் !!
·         என் அண்ணனின் ஷேக்ஸ்பியர் பாடத்துக்கு உதவி பண்ணியது.
·         72 வயதிலும் , எதையும் பொருட்படுத்தாமல் மகடி, திப்பசன்றா போன்ற கல் மலைகளை அனாயசமாக ஏறியது- துணக்கு ஒரு உப்புக்கு சப்பாணியாக நான் !
·         என்னை பெங்களூர் வீதியில் கை பிடித்து கூட்டிச் சென்றது.
·         எனக்குப் சென்னை பாரிசில் ராமகிருஷ்ணா பவனில் மசாலா தோசை வாங்கிக் கொடுத்தது,
·         இரவில் எப்ப எழுந்து வந்தாலும், ஏதாவது திங்கக் கொடுப்பார்.
·         கடைசி வரை தன் நிலையை எதற்க்கும் விட்டுக்கொடுக்காதவர்.
·         அறுபதுகளில் கப்பல் போன்ற ஸ்டுடிபேகர் கார் வைத்திருந்தார்.
·         திடீரென்று எல்லா பிள்ளைகளையும் கூப்பிட்டு கொஞ்சம் பணம் கொடுத்து , இது தான் நான் உங்களுக்காக சேர்த்தது என்று எங்கள் எல்லோரையும் அசர வைத்தது. அன்றைய வருடத்தில் அது பெரிய பணம் (விஷயம்)
·         கடைசி வரையில் எல்லோரையும் கூட்டுக் குடும்பத்திலேயே இருக்க வைத்து, பிற்கால உறவுக்கு ஒரு பெரிய அஸ்திவாரம் போட்டது.

இந்த மாதிரி ஒரு அப்பாவாக நான் இருந்தால் போதும் !!

Wednesday, March 28, 2012

எங்கே போச்சு ?


காலையில்  வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் பாரதியும், ராஜாவும் பழைய நினைவுகளை நன்றாக கிளரிவிட்டார்கள்அந்தக் காலத்தில் இருந்த எந்தெந்த  மனிதர்கள், பழக்க வழக்கங்கள் எல்லாம் தொலைந்து போயிருக்குன்னு.

அனேகமாக எல்லோருக்கும், குறிப்பாக தமிழகத்தில் பிறந்து வளர்ந்த எல்லாப் பசங்களுக்கும் இதில் ஏதேனும் கொஞ்சமானும் அனுபவித்திருப்பார்கள்

அப்படி இல்லன்னா உடனே தயவு செய்து இங்கிருந்து விலகவும். நீங்கள் இன்னும் பிள்ளைப் பிராயமே தாண்டவில்லை. அதற்குள் எதுக்கு ப்ளாக் எல்லாம்? 

மாடும், பால்காரரும்
சாணை பிடிப்பவர்கள் 
ரோட்டில் உருளும் கோவிந்தா
தயிர் சட்டிகள்
அம்மி, ஆட்டுக்கல் 
ஈயம் பூசுபவர்கள்
சாட்டையால் அடித்துக் கொள்பவர்கள்
பூம் பூம் மாடு
குரங்காட்டிகள்
கிளி ஜோசியக்காரர்கள்
ஸ்லேட்டு, பல்ப்பம்
ரோட்டில் பம்பரம், கில்லி, கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்

ஆகர் விழாத பம்பரம், ஜாட்டி
தாவணிகள் (வெட்கத்துடன்


ரேடியோவில் திரைகானம், விவித பாரதி
மொக்கு மாவு 
பெருத்த ஓசை எழுப்பும் மாவு மிசின்கள் 
கறிகாய் கடைகளில் பேசும் பேரம்
பட்சணக் கடைகளில் கேட்காமலே கிடைக்கும் தூள் பக்கோடா
கொஞ்சம் கருகப்பிலை , கொத்து மல்லி 
அரையணா பட்டணம் பொடி
பத்து பைசாக்கு ராஜகுமாரி வரைக்கும் பஸ் டிக்கட் 
ஸ்கூல் வாசல் மாங்கா பத்தை , இலந்தப் பழம் வகையறா 
முதல் ரோ சினிமா , கமர்கட், குச்சி ஐஸ் 
வாத்தியாரிடம் உள்ளங்கையில்  பிரம்படி, அடி படாட்டாலும் வலிக்கற மாதிரியே நடித்தது  -  (இப்பல்லாம் வாத்திய தூக்கி உள்ளே வச்சுருவாங்கள்ளே) 
ரேடியோ கமெண்டரி 
அரை டிராயர் யூனிபார்ம் 
ஓட்டைக் காலணா 
காப்பிக் கொட்டை  மிசின் 
தீபாவளி, பொங்கல் வாழ்த்து அட்டைகள் 
சைக்கிளின் எண்ணை விளக்கு
திங்கள் காலை அவசர அயர்னிங் 
சைக்கிள் டபுள்ஸ் - போலிஸ் தொப்பியைக் கண்டதும் குதிப்பது 
மாசக் கடைசியில் அம்மாகிட்டே எட்டணா ( "அப்பா கிட்ட சொல்லாதே"

எல்லாத்தையும் ஒரு வாட்டி படிச்சுப் பாத்தா , சாலமன் பாப்பையா குரல் கேக்கல ?  " நல்லத்தாம்பா இருந்தது

Wednesday, March 21, 2012

மனதை வருடிய வரிகள்


கொஞ்ச நாள் முன்னே தூக்கம் வராத ஒரு பின்னிரவில் பழைய பாடல்கள் கேட்டேன். என்ன அருமை

திரும்பிப் பார்த்ததில் இந்த மாதிரி மனதை வருடிய  சில வரிகள் :

மணக்கும் வரை  பூக்கடை மணம் மாறினால் அது சாக்கடை
தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே 
வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை 
நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெட புழுதியில் றிவதுண்டோ 
இது குழந்தை பாடும் தாலாட்டு 
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது 
ஆட்டு வித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா 
விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
விடுகதையா  இந்த வாழ்க்கை 
எனக்கேதும் ஆனதுன்னா உனக்கு வேறு பிள்ளையுண்டு, உனக்கேதும் ஆனதுன்னா எனக்கு வேறு தாய் இல்லை 
நெஞ்சுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ 
 தென்னையப் பெத்தா இளநீரு, பிள்ளையப் பெத்தா கண்ணீரு 
காகித ஓடம் கடலலை மேலே 

இன்றைய பாடல்களும் இன்னும் பல வருஷங்களுக்குப் பின்னால் இப்படித்தான் இருக்குமோ - சந்தேகம்தான்