Wednesday, February 22, 2012

துன்பம் வரும் வேளையிலே


இன்று காலை பட்டி மன்றம்  புகழ் ராஜாவும் பாரதி பாஸ்கரும் வழக்கம் போல் ச்னேகத்துடனும் ஹாஸ்யமாகவும் வாங்க பேசலாம் என்று அழைத்து வாழ்க்கையின் அதிர்ச்சிகளை சமாளித்தவர்களைப் பற்றி நன்கு கதைத்தார்கள். எதிர்பார்த்தது போல் யுவராஜ் தான் தலைப்பு செய்தி 

அவரின் அபார தன்னம்பிக்கை, புற்று நோய் என்று அறிவித்து - இல்லை இது அதனுடைய ஒன்று விட்ட தங்கை - அதனால் அவ்வளவு பாதிப்பு இல்லை என்று தெரிந்து, எப்படி இப்ப அமெரிக்காவில் அபாரமாக உடல் நிலை தேறி வருகிறார் என்று. இதற்கு முன் அவர் அப்பா சொன்னது, உலகக் கோப்பையின் போதே அவருக்கு இதற்கான அறிகுறிகள் இருந்தது என்று- அபாரமான மனிதர்.

பின் பொது மக்களுக்குத் தெரியாத பல உண்மைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டினார்கள்.

புகழ் பெற்ற தென்னாப்ரிக்க வீரர் Johnty Rhodes, காக்காய் வலிப்புப் போல் ஒரு வியாதி இருந்தும்

அவர் முன்னணி நட்சத்திரமாக விளங்கியது அபாரமான விஷயம்.

பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளார் சாரதா நம்பி ஆரூரன், தன் வாழ்க்கையில் பல இடிகளைக் கடந்து சிறந்த தொண்டாற்றி வருகிறார்.

பாகிஸ்தானின் வாசீம் அகரம் கடுமையான ஆஸ்த்மா மற்றும் சர்க்கரை நோய் இருந்தும், மிக வேகமாக ஓடி பல சாதனைகளைப் புரிந்து, அவர் நாட்டுக்கு உலகக் கோப்பை கிடைக்கவும் ஒரு பெரும் சக்தியாக இருந்துள்ளார்.

Jesse Owens என்ற ஒரு கருப்பு  இனத்தைச் சேர்ந்தவரும் பல இன்னல்களைப் போராடி ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றார்.

இப்படி பல கதைகள் - அல்ல- வேதனைக்கு நடுவில் சாதனைகள் 

புற்று நோயைப் பற்றிப் பேசுகையில் அது எப்படி வந்தவர்களையும், அதைவிட அவர்களின் குடும்பங்களையும் புரட்டிப் போடும் என்று வியந்தார்கள். ஆனால் எல்லோரும் தைரியமாக இருக்க வலியுறுத்தினார்கள்இங்குதான் சில நிதர்சன உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இது எல்லா விதத்திலும் ஒரு கொடிய நோய். வருமுன் மிகக் குறைந்த அறிகுறிகளே இருக்கும். அதுவும் நம்மை ஏமாற்றும் சாதாரண வகையான இருமல், மாடி ஏறினால்  மூச்சுத் திணறல், வயிற்றுப் போக்கு போன்றவைகள். இதனால் இதை அறிந்து கொள்ளும் போதே பலருக்கு இந்த நோய் முற்றி விடுகிறது. முற்றினால்  இந்த நோய்க்கு நிவாரணம் கிடையாதுஇதை உணர்ந்த பின், நோயாளியும் அவர் குடும்பமும் அனுபவிக்கக் கூடிய அவஸ்தை என்று சொல்லக்  கூடிய Trauma கொடுமையானது. மற்றவர்கள் நின்று வேடிக்கை தான் பார்க்க முடியும். சொல்லும் சமாதானமும், அறிவுரையும்  சொல்லும் போதே அதன் பொய்மையை  வெளிப்படுத்தும். இந்த மாதிரி சொல்ல இந்தச் சூழ்நிலையை முற்றிலும் அனுபவித்த நான் எல்லா விதத்திலும் தகுதியுள்ளவன் என்று மிக சோகத்துடன் தெரிவிக்கிறேன்

மிக நன்றாய் , சந்தோஷமாய், எந்த வித தேவையல்லாத பழக்களுக்கும் ஆளாகாத, தினமும் காலையில் நடந்து, சனிக்கிழமை தவறாமல் எண்ணை தேய்த்துக் குளித்து, ஞாயிறு தவறாமல் பூண்டு சாப்பிட்டு, கோடையில் இளநீரும், மார்கழி இரவில் சூடான பாலும் குடித்து, உடம்பை எந்தவித misuseம் பண்ணாத என் சகோதரன், இந்த நோய் இவன் மேல் கொண்ட காதலால் , யாரிடமும் சொல்லாமல், எந்த மருத்துவர் சொல்லியும் கேளாமல் கண்ட ஒரு வருடங்களில் கட்டாயமாக புதுக் காதலியுடன் போய் விட்டான் . இவன் குடும்பமும் என்னைப் போன்ற கூடப்பிறந்த துர்பாக்கியசாலிகளும் எப்படி இதை ஜீரணிப்பது என்று தெரியாமல் இன்னும் தடுமாறிக்  கொண்டுதான் இருக்கிறோம்!

இடுக்கண் வருமுன் வேண்டுமானால்  சிரிக்கலாம் ஏனென்றால் இன்னும் நம்பிக்கை தொற்றிக் கொண்டிருக்கும். ஆனால் இப்படிப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்வதே , இல்லை பிரார்த்திப்பதே நம்மால் செய்ய முடியும். "பாம்பு வந்து கடிக்கையில் பாழும் உடல் துடிக்கையில் யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு " என்ற பாடல் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருது.

அதனினும் கொடிது ஆற்றோனாக் கொடு நோய் என்றது போல் இதெல்லாம் நம்மைப் பாராமல் இருப்பதே நன்று. நம்மால் முடிந்தவற்றையும் நாம் செய்யலாம். என்ன தான் சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலராய்  இருந்தாலும், புகையைப் பிடிக்காமல் விட்டு விடலாம். விரல் இடுக்குகளுக்கு வேறு பல வேலைகள் உள்ளன. சிகரெட்டை விட்டு விட்டு பேனாவுக்கும் அதை உபயோகப் படுத்தலாமே.

பேச்சாளர்கள் சொன்ன மற்றொரு சேதி- இந்த நோய்வாய்ப்பட்ட எல்லோருமே "எப்படி எனக்கு", "ஏன் எனக்கு" என்றுதான் புலம்புகிறார்களாம். அதென்னவோ  உண்மை தான். குடித்தால், புகைத்தால் தான் புற்று நோய் என்பதில்லை

இந்த சமயத்தில் நான் பார்த்த மற்றறொரு செய்தியும் ஞாபகத்துக்கு வருகிறது. தனக்கு வேலை கிடைத்தாலோ, நல்ல சம்பந்தம் கிடைத்தாலோ , வீடு வாங்கினாலோ, பிள்ளை அமெரிக்கா போனாலோ யாருமே "எப்படி எனக்கு இந்த அதிர்ஷ்டம்" என்று யோசிப்பதில்லை. நான் இந்த interview சரியாகவே பண்ணவில்லை - இருந்தும் எப்படி எனக்கு இந்த chance ... இந்த மாதிரிக் கேள்விகளெல்லாம் புதைக்கப்  படுகின்றனசோதனைகள் வந்தால் தான் வீட்டில் உள்ள பூஜை அலமாரியும், கோவிலும் தேடப்படுகின்றன !!

1 comment: