Tuesday, March 6, 2012

நிலா நிலா வா வா


சின்ன வயசில் எத்தனையோ பாப்பா கதைகள் கேட்டிருக்கிறோம். குழந்தைகளுக்கு   நிலவைக் காட்டி 'நிலா நிலா ஓடி வா ' என்று சோறூட்டுவார்கள். கலர் கலராக பொம்மைகள் வாங்கிக் கொடுத்து சந்தோஷப் படுவார்கள். பந்துகளை கலர் சொல்லி குழந்தை எடுப்பதை பார்த்து நோபல் பரிசு வாங்கியது போல் பூரிப்பார்கள்இப்படி நீங்களும் செய்தவர்களாக இருந்தால் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் - நீங்களும் கொடுத்து வைத்தவர்கள் தான். நாம் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறோம் என்று நமக்கே தெரியாதுநன்னா கண் தெரியற போதே ஸ்டூலில் இடித்துக்  கொண்டு வீட்டில் உள்ளவர்களை அர்ச்சிக்கிறோம். தேவை இல்லாத  போதும் ஸ்டைலுக்காக ஒரு  கூலிங்  க்ளாஸ் போட்டுக் கொண்டு வண்டியில் வளைய வருகிறோம்அப்போதைக்கு இப்போதே சொல்றேன்னு  சுவாமியைப் பார்த்து நாராயணா நாராயணா என்று சொல்லி வைத்துக் கொள்கிறோம். குழந்தைகளை ஓடாதே ஓடாதே என்று திட்டுகிறோம்.

போன ஞாயிற்றுக்  கிழமை திருமலைப் பிள்ளை சாலையில் உள்ள ஒய் ஜி பீ அரங்கில் என் நண்பி சொன்னால் என்று போனால் , கிட்டத் தட்ட ஒரு இருநூறு முன்னூறு பேர் , என்னைப் போன்றவர்களுக்காக காத்திருந்தார்கள். ஆங்கிலம் என்றால் இங்கே. தமிழ் மட்டும் என்றால் அங்கே என்று கூறு போட்டு கூவிக் கொண்டிருந்தார்கள்

ஆம் . இந்தக் குழந்தைகளுக்கு கண் பார்வை இல்லை. சிலருக்கு கண்  திறக்கவே இல்லை, சிலருக்கு பாதி திறந்து, சிலர் கூலிங் க்ளாஸ் போட்டு மறைத் திருந்தார்கள்நான் ஆங்கிலம் படிப்பது மட்டும் என்றதும் ஒரு பீ இரண்டாம் ஆண்டு பெண் வந்தது. நான் செய்ய வேண்டியதெல்லாம் ஒரு ஆங்கிலப் பாடத்தை படிக்க வேண்டும். அந்தப் பெண் அதை எழுதிக்  கொள்ளுவாள். அவள்  பையிலிருந்து ஒரு வழ வழப்பான அட்டை கொண்ட "Motor World"  
பத்திரிகை  எடுத்தவுடன் நான்  இவர்களுக்கு இதிலெல்லாம் கூட ஆர்வம் இருக்குமா என்று 
ஆச்சரியப் பட்டேன். அதை இரண்டு பக்கங்களாக மடித்து இடையில் ப்ரையில் அட்டையைச் 
சொருகியதும் வெட்கப் பட்டேன்.

இவள்  பிறப்பதுக்கு முன்  இவளது அப்பாவும், அம்மாவும் எவ்வளவு கனவு கண்டிருப்பார்கள். என்னவெல்லாம் படிக்க  வைக்க நினைத்திருப்பார்கள். படித்த பின் தன்னை இந்தக் குழந்தை எப்படியெல்லாம் காப்பாத்தும் என்று எண்ணி இருப்பார்கள். எல்லாம் கனவாகி விட்டதே. இன்று இந்தக் குழந்தை இரண்டு அடி எடுத்து வைப்பதற்கே இன்னொருவர் உதவி தேவையாய் இருக்கே. இதை எல்லாம் இவளது பெற்றோர்கள் எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்கள். நினைக்க நினைக்க வேதனை அதிகமாயிற்றுஇவர்கள் நிலாவை பார்திருப்பர்களா ? ஓடிப் பிடித்து, ஒரு மூலையில் கண்ணை மூடிக் கொண்டு ஒளிந்து விளையாடி இருப்பார்களா. இவர்களுக்கு என்னென்ன  கனவெல்லாம் இருக்கும் - இப்படி சிந்தனைகள் ஓடின. திடீரென்று அவளின் கைகளில்   பார்த்தால் தெரிந்தது எல்லா விரல்களிலும் மருதாணி !  - உண்டு இவர்களுக்கும் ஒரு லட்சியம், கனவு என்று தெரிந்தது .

சமீபத்தில் எனக்கு வந்த ஒரு forward  நினைவுக்கு வந்தது . நம் நாட்டில் மொத்தம் சுமார்  ஏழு லட்சம்  கண் தெரியாதவர்கள் இருக்கிறார்கள் . தினமும் சுமார் ஆறு லட்சம்   பேர் இறக்கிறார்கள். இறப்பவர்கள் அனைவரின் கண்ணையும் தானம் செய்தால் , பதினோரு நாட்களில் கண் தெரியாதவர்களே இல்லாத நாடாக மாற்றி விடலாமே . அங்கு வந்து படித்து, பாடம் சொல்லிக் கொடுப்பதில் என்னைப் போன்ற சிலரைத் தவிர பெரும்பாலும் இளைய சமுதாயமே. ஜீன்ஸ் அணிந்த ஆண்களும் பெண்களும் , இந்தப் பார்வையற்றவர்களை கையைப் பிடித்து  அழைத்துச்  சென்று, சிரித்த முகத்தோடு பேசி, தனக்கு வந்த காபியையும் பசங்களுக்குக் கொடுத்தது - இந்தியாவின் மேல் இன்னும் நம்பிக்கையை வளர்க்க உதவியது. கிடைக்கும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் டீ வீ முன்னாடி உட்காராமல் பாடம் படிக்க வந்தவர்களை நினைத்துப் பெருமையாய்  இருந்தது

நான் கிளம்பும் பொழுது , இந்தச் சேவை ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நடப்பதாகவும் இப்படி உதவினால் ரொம்ப  சௌகரியமாக இருக்கும் என்று எனக்கு நன்றியுரைத்த பெரியவரைப் பார்த்தும் ஆச்சர்யப் பட்டேன்- ஏன்னா அவருக்கு வயது எழுபதுக்கு மேல போல !

யார் சொன்னா ரிடையர்மெண்டுக்கு அப்புறம் சோம்பேறி ஆகி விடுவோம்னு. நாட்டில் நல்ல பல வேலைகள் நமக்காக காத்திண்டிருக்கு. பொழுது போதாது

I realised a different meaning for Irwing Wallace's  "Sunday Gentleman"



1 comment:

  1. On 8-Mar-2012, thanjavur loganathan veerakumar wrote "
    Blessed YOU are.
    You have opened my "EYES".
    At Thanjavur I will search a place to start my endeavour"

    ReplyDelete